Thursday, December 27, 2012

சட்டக்கல்லூரிப் பேராசிரியர்கள் : திரு. ஜெயபால்




சட்டக்கல்லூரியில் எனக்குப் பேராசிரியர்களாக இருந்தவர்களைப்பற்றி எழுதவேண்டுமென்றால் முதலில் திரு ஜெயபால் அவர்களைப் பற்றித்தான் எழுதவேண்டும். முதலில் உதவிப் பேராசிரியராக இருந்த அவர் நாங்கள் பட்டப்படிப்பை முடிக்கும்போது துறைத் தலைவராக ஆகிவிட்டார். நான் சட்டத்தில் பட்டம் பெற அவர்தான் காரணம். சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்குகளில் ஆஜராகித் தொழில் செய்துவந்த அவர் வழக்கறிஞர் வேலை பிடிக்காமல் பேராசிரியராக வந்துவிட்டார். கோர்ட் ப்ராக்டிஸ் குறித்து அவருக்கு நல்ல அபிப்ராயம் இருந்ததில்லை. வேலைக்குப் போய்விடுங்கள், கோர்ட்டுக்குப் போகாதீர்கள் என்று அடிக்கடி சொல்வார். நான் சட்டக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது முதலாண்டிலேயே சென்னை உயர்நீதிமன்றத்தில் எழுத்தர் வேலை எனக்குக் கிடைத்தது. 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அதற்கான உத்தரவு வந்தது. போட்டித் தேர்வு எழுதி அதில் தேர்வு செய்யப்பட்டு அதன்பின்னர் நேர்முகத் தேர்விலும் செலக்ட் செய்யப்பட்டு அந்த வேலைக்கான உத்தரவு வந்தபோது நான் மகிழ்ச்சியடையவில்லை. முதல்முறையாகக் கிடைத்த வேலையைப் பற்றி என் பெற்றோர்களுக்கும்கூடச் சொல்லவில்லை.

திரு.ஜெயபால் சிவில் சட்டங்களில் வல்லவர் என்றாலும் அவரது திறன் முழுதுமாக வெளிப்பட்டது  காண்ட்ராக்ட்ஸ் பாடத்தில்தான். நான் மூன்றாண்டு சட்டப் படிப்பையும் இரவல் புத்தகங்களிலும், நூலக உதவியிலும்தான் முடித்தேன். நான் விலைகொடுத்து வாங்கிய ஒரே புத்தகம் காண்ட்ராக்ட்ஸ் புத்தகம்தான். என்னுடன் சட்டப் படிப்பில் சேர்ந்த கணிவண்ணன் டெல்லியில் படிக்க இடம் கிடைத்ததால் இங்கிருந்து புறப்பட்டபோது அவர் புதிதாக வாங்கியிருந்த அந்தப் புத்தகத்தை தள்ளுபடி விலையில் எனக்குத் தந்தார். சோகம் என்னவென்றால் சில நாட்களிலேயே அந்தப் புத்தகத்தை நான் தொலத்துவிட்டேன்.

பேராசிரியர் ஜெயபால் பாடம் நடத்தியதை நினைவுகூரும்போது அவர் புனே என்ற ஊரின் பெயரை ப்யூன் என்று உச்சரிப்பதுதான் நினைவுக்கு வருகிறது. அப்படித்தான் உச்சரிக்கவேண்டுமா? அவர் ஏன் அப்படி உச்சரித்தார் என்பது அப்போதும் இப்போது எனக்கு விளங்கவில்லை. அவர் தினமும் கடலூரிலிருந்து ரயிலில் வந்துபோய்க் கொண்டிருந்தார். விழுப்புரத்திலிருந்து கடலூர் வழியாக மயிலாடுதுறை வரை செல்லும் பாசஞ்சர் ரயிலில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு வந்து படித்தார்கள். அந்த மாணவர்களோடு அவரும் வருவார்.கையில் புத்தகத்தோடு வகுப்பில் அவர் பாடம் நடத்தும் காட்சி இப்போதும் எனக்குப் பசுமையாக நினைவில் இருக்கிறது. கண்ணாடி அணிந்த அவரது முகம் மட்டுமல்ல அவரது குரலும் காதில் ஒலிக்கிறது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலையில் சேர்ந்த நான் ஒன்றரை மாதத்தில் அதை ராஜினாமா செய்துவிட்டு வந்துவிட்டேன். தலைமைச் செயலகத்திலும் , உயர்நீதிமன்றத்திலும் பணிபுரிபவர்கள் பி.எல் முடித்தால் அவர்களை ஜுடிஷியல் மாஜிஸ்ட்ரேட் ஆக நியமிக்கும் முறை முன்னர் இருந்தது. எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்ததும் அது ரத்துசெய்யப்பட்டு கட்சி சார்புகொண்ட வழக்கறிஞர்கள் அந்தப் பதவிகளில் நியமிக்கப்பட்டார்கள். அதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. நான் வேலையில் சேர்ந்த நேரத்தில்தான் அந்த வழக்கில் தீர்ப்பு வந்தது. அரசின் உத்தரவு செல்லும் என்று நீதிமன்றம் சொல்லிவிட்டது. எனவே அந்த வேலையில் இருப்பதால் பிரயோஜனம் இல்லை என்ற முடிவில் நான் ராஜினாமா செய்ய முடிவெடுத்தேன். இந்தக் காரணத்தைத் தாண்டி இன்னும் இரண்டு முக்கியமான காரணங்கள் இருந்தன- சென்னை எனக்குப் பிடிக்கவில்லை என்பது முதல் காரணம்.இப்போதும் கூட அந்த ஒவ்வாமை என்னைவிட்டு அகலவில்லை. சென்னையில் நுழையும்போதே அங்கிருந்து கிளம்புவதைப்பற்றி சிந்திக்கத் தொடங்கிவிடுவேன்.இரண்டாவது காரணம் சென்னை உயர்நீதிமன்றத்தில்  நான் பணியில் இருந்த நோட்டீஸ் செகஷனில்   இருந்த மூச்சுத் திணற வைக்கும் பிராமண ஆதிக்கச் சூழல்.சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றில் போட்டித் தேர்வு நடத்தி தேர்வு செய்யப்பட முதல் பேட்ச் எங்களுடையதுதான் என நினைவு. அது அங்கிருந்தவர்களுக்குப் பிடிக்கவில்லை. என்னை ஒரு விரோதி போலவே அவர்களெல்லோரும் பார்த்தார்கள். அதனால் அங்கிருந்து தப்பித்து வெளியேறிவிடவேண்டும் முதல் நாளிலேயே எனக்குத் தோன்ற ஆரம்பித்துவிட்டது. 

உயர்நீதிமன்றத்தில் வேலையில் இருந்தபோது நான் பிரசிடென்ஸி காலேஜின் விடுதியில் அங்கு தங்கிப் படித்துக்கொண்டிருந்த எனது நண்பரான வளையாபதியின் அறையில்தான் தங்கியிருந்தேன். அவர் எம்.எஸ்.சி  ஜியாலஜி படித்துக்கொண்டிருந்தார். ( தற்போது நபார்டு வங்கியில் உயர்பதவியில் மும்பையில் இருக்கிறார்). விக்டோரியா ஹாஸ்டல் எனப்படும் அந்த விடுதி ஒரு கல்லூரி விடுதிக்கான எந்த வசதியும் இல்லாத ஒன்றாகும்.சென்னையில் இருந்தாலும் சிறு நகரம் ஒன்றில் இருக்கும் ஆதிதிராவிட நலப் பள்ளியின் விடுதியைப்போலவே இருக்கும்.குளியல் அறைகூட அங்கு ஒழுங்காக இருக்காது. திறந்தவெளியில்தான் குளிக்கவேண்டும். புதர் மண்டிய அந்த விடுதி இப்போது இன்னும் மோசமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

உயர்நீதிமன்ற வேலையைத் துறந்து மீண்டும் படிப்பைத் தொடர்ந்துகொண்டிருந்த எனக்கு 1982 ஆம் ஆண்டு ரயில்வே துறையில் அசிஸ்டெண்ட் ஸ்டேஷன் மாஸ்டர் பதவிக்கு உத்தரவு வந்தது.அதுவும் போட்டித் தேர்வு எழுதி அதில் வெற்றிபெற்று அதன் பின்னர் நேர்முகத் தேர்வில் செலக்ட் ஆனதால் வந்த வேலைதான்.பாலக்காடு டிவிஷனில் எனக்கு நியமனம் ஆகியிருந்தது. பாலக்காடு சென்று அங்கு மருத்துவ தேர்வுக்கு ஆஜர் ஆகி  அதிலும் தேர்வான பின்னால் உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. திருச்சியில் இருக்கும் ரயில்வே பிராந்திய பயிற்சிக் கல்லூரியில் ட்ரெயினிங். ரயில்வே வேலை கிடைத்ததும் நான் பேராசிரியர் ஜெயபாலிடம் சொன்னேன். உடனே அதில் சேர்ந்துவிடு என்று சொன்னார். பி.எல் பட்டம் பெறுவதைப் பற்றி கவலைப்படாதே அதற்கு நான் பொறுப்பு. நீ ரெகுலரிலேயே கோர்ஸை முடிக்க நான் ஏற்பாடு செய்கிறேன் என்று என்னை ஊக்குவித்தார். நான் ரயில்வே ட்ரெயினிங்கில் இருந்த சமயத்தில் ஒருநாள் நான் தங்கியிருந்த இஅடத்துக்குத் திடீரென்று அவர் வந்தார். நான் அவரை எதிர்பார்க்கவில்லை. ஒரு வேலையாக திருச்சி வந்தேன் உன்னைப் பார்க்கவேண்டுமெனத் தோன்றியது என்றார். எனக்கு ஆச்சர்யம் தாளவில்லை. உன்னுடைய இயல்புக்கு கோர்ட் ப்ராக்டிஸ் ஒத்து வராது. அது மோசமானவர்களின் புகலிடமாகிவிட்டது. நீ இந்த வேலையை விட்டுவிடாதே என்றார்.

பேராசிரியர் ஜெயபால் தான் சொன்னபடி எனக்கு பி.எல் பட்டம் கிடைக்க அனைத்து உதவிகளையும் செய்தார். ஆனால் அவர் எனக்குச் சொன்னதில் பாதியைத்தான் நான் நிறைவேற்றினேன். 1983 ஆம் ஆண்டு பி.எல் முடித்தாலும் நான் கோர்ட் ப்ராக்டிசுக்குப் போகவில்லை. ஆனால் ரயில்வே வேலையில் நான் நீடிக்கவில்லை. மூன்றே மாதங்களில் அதை உதறிவிட்டு மீண்டும் சட்டக் கல்லூரிக்கு வந்துவிட்டேன்.

Sunday, December 23, 2012

சட்டக் கல்லூரி மாணவனாக இருந்தபோது


நான் சட்டக் கல்லூரி மாணவனாக இருந்தபோது எடுத்துக் கொண்ட படங்கள் சில 




முப்பது ஆண்டுகளுக்குப் பின் முதல் சந்திப்பு




1980-83 ஆண்டுகளில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற ஒரு வகுப்பு நண்பர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒருமுறை சந்தித்து வருகின்றனர். கடந்த இரண்டு முறை நான் அதில் பங்குபெற முடியவில்லை. இந்த ஆண்டு 22.12.2012 சனிக்கிழமை மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா கழக விடுதியில் கூடுவதாக முடிவுசெய்து அந்தத் தகவலை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றும் அறிவுடைநம்பி எனக்கும் தெரிவித்திருந்தார். அங்கு போவது குறித்து முடிவெதுவும் எடுக்க முடியாத அளவுக்கு வேலைச் சுமை. அதனால் அவரிடம் உறுதிப்படுத்த முடியாத நிலை. 22 ஆம் தேதி காலை நான் ஸ்கூட்டரில் சாலையில் போய்க்கொண்டிருந்தபோது என் வகுப்புத் தோழன் பரிமளம் காரில் என்னைக் கடந்து போனவன் என்னைப் பார்த்துவிட்டு சப்தம் போட்டு நிறுத்தினான். அவனைப் பார்த்ததும் நானும் போவதென முடிவு செய்தேன்.

பகல் இரண்டு மணி அளவில் நானும் மாமல்லபுரம் போய்ச் சேர்ந்தேன். அங்கு பரிமளம், புகழேந்தி முதலான நண்பர்களோடு நான் சற்றும் எதிர்பார்க்காத மனோகரன் இருந்தார். ஏற்கனவே சிலர் வந்திருந்தனர். ராமச்சந்திரன், ரவிக்குமார், ராமர் என ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள்.அவர்களெல்லோரும் வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்தார்கள். திருநெல்வேலி, கடலூர், திருவண்ணாமலை, சென்னை, தர்மபுரி, நாகர்கோயில் என நீண்ட தொலைவிலிருந்து வந்திருந்த நண்பர்களைப் பார்த்தபோது கல்லூரிக்காலம் நினைவில் நிறையத் தொடங்கியது.


நான் சட்டம் படிக்கவேண்டும் என விரும்பியதில்லை. நான் படித்த பி.ஏ டூரிஸம் என்ற இளநிலைப் பட்டப் படிப்புக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் படிப்பு இல்லை. எம்.ஏ வில் வரலாறுதான் படிக்கவேண்டும். அதில் எனக்கு விருப்பமில்லை. அதன் காரணமாகவே  பி.எல் படிப்பில் சேர்வதென முடிவு செய்தேன். அண்ணாமலையில் 1978 ஆம் ஆண்டில்தான் பி.எல் படிப்பு தொடங்கினார்கள். மூன்றே பேட்சுகள்தான். நாங்கள் கடைசி பேட்ச். அத்துடன் அந்தப் படிப்பையே மூடிவிட்டார்கள்.முதல் பேட்சில் எனது நண்பர்கள் சிலர் சேர்ந்திருந்தனர். சீர்காழி தொகுதியின் எம்.எல்.ஏ வாக இருமுறை இருந்த பன்னீர்செல்வம் அந்த முதல் பேட்சில் சேர்ந்திருந்தார். அவர் சேர்ந்தவிதம் ஒரு தனிக் கதை.

பன்னீர்செல்வத்தால் அவரது வகுப்புத் தோழர்கள் பலர் எனக்கும் பழக்கமானார்கள். நான் , பன்னீர்செல்வம், பி.எஸ்.சி பாட்டனி படித்துக்கொண்டிருந்த தங்கராஜ் மூவரும் எப்போதும் ஒன்றாக இருப்போம். நாங்கள் ரயிலில் வந்து படித்துக்கொண்டிருந்தோம். பன்னீர் திருமயிலாடி என்னும் ஊரிலிருந்து வருவார். நாங்கள் இருவரும் கொள்ளிடத்தில் ஏறுவோம். அந்தப் பழக்கமும் நான் பி.எல் படிப்பைத் தேர்வுசெய்ய ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

எங்கள் வகுப்பில் மொத்தம் 61 பேர் இருந்ததாக நேற்று நண்பர்கள் சொன்னார்கள். அது எனக்கு நினைவில் இல்லை.அதில் 16 பேர் இம்முறை மாமல்லபுரம் வந்திருந்தார்கள். பலர் குடும்பத்தோடு வந்திருந்தார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக சந்தித்ததில் அவர்கள் குடும்பத்தினரும் ஒருவரோடு ஒருவர் அறிமுகமாகியிருந்தார்கள். கொஞ்ச நேரம் இருந்து எல்லோரையும் பார்த்துவிட்டுப் புறப்பட்டுவிடலாம் எனப் போன என்னால் அப்படி சுலபமாகக் கிளம்ப முடியவில்லை. இரவு எட்டரை மணிக்குத்தான் அவர்களிடமிருந்து விடைபெற முடிந்தது.

மாமல்லபுரம் வந்திருந்த நண்பர்கள் :

அறிவுடை நம்பி, சந்திரசேகரன்,பரிமளம்,ரவிக்குமார்,முருகன்,ஜெயராஜ்,ராமர்,மனோகரன்,ராமச்சந்திரன், தேவராஜ், புகழேந்தி,ராதாகிருஷ்ணன்,வைத்தியநாதன், பரமேஸ்வரி, நடனமணி. என்னைச் சேர்த்து 16 பேர்.  அவர்களில் சிலரது புகைப்படங்கள் இங்கே:
மனோகரன் 
புகழேந்தி 
பரிமளம் 








ரவிக்குமார் 




முருகன்